முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, தனது பதவிக்காலத்தில் வாகனங்கள் மற்றும் எரிபொருள் பயன்படுத்தியமை தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
2015 முதல் 2024 வரையான காலப்பகுதியில் நாடாளுமன்ற அதிகாரிகளின் வாகனப் பயன்பாடு தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையின் தகவல்கள் சில தரப்பினரால் அரசியல் நோக்கங்களுக்காக தவறாக பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தாம் சபாநாயகராக இருந்த காலத்தில் ஒன்பது வாகனங்களை பயன்படுத்தியதாக வெளியாகியுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது என குறிப்பிட்டுள்ள அவர், நாடாளுமன்றத்தினால் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்ட வாகனங்களையே பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு தேவைகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி செயலக சுற்றறிக்கைகள் மற்றும் அரச நடைமுறைகளுக்கு அமைவாக வாகனங்கள் ஒதுக்கப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்ட பாதுகாப்பு நிலைமையைத் தொடர்ந்து தனது பாதுகாப்புக்காக மேலதிக பணியாளர்கள் மற்றும் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரையின் அடிப்படையில் ஜனாதிபதி செயலகத்தினால் குண்டுத்தாக்குதலைத் தாங்கக்கூடிய பாதுகாப்பு வாகனம் ஒன்று வழங்கப்பட்டதாகவும், அதன் அதிக எரிபொருள் நுகர்வு காரணமாக மொத்த எரிபொருள் செலவில் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் பதவியில் இருந்தபோது நாடு முழுவதும் பல்வேறு உத்தியோகபூர்வ பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருந்ததால், சாதாரண தனிப்பட்ட வாகனப் பயன்பாட்டுடன் அதனை ஒப்பிடுவது பொருத்தமானதல்ல எனவும் அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏதேனும் முறைகேடு தொடர்பில் ஆதாரங்கள் இருந்தால் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாகன இயக்கப் பதிவுகள் மற்றும் எரிபொருள் பயன்பாடு தொடர்பான ஆவணங்கள் நாடாளுமன்றத்தில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், அவற்றை உரிய முறையில் சரிபார்க்க முடியும் எனவும் முன்னாள் சபாநாயகர் கூறியுள்ளார்.
கணக்காய்வு தகவல்களை முழுமையான பின்னணியின்றி பயன்படுத்தி அரசியல் நோக்கங்களுக்காக மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் எனவும் அவர் அரசியல் தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.





