வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிட்டு கணக்கிடப்பட்ட உலகளாவிய குறைந்தபட்ச ஊதிய தரவரிசையில் இலங்கை 130 நாடுகளில் 120ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாக புதிய அறிக்கையொன்று தெரிவிக்கிறது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) தரவுகளை அடிப்படையாகக் கொண்டு Visual Capitalist வெளியிட்டுள்ள ஒப்பீட்டு அறிக்கையிலேயே இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையின் கணக்கீட்டின்படி, இலங்கையின் மாதாந்த குறைந்தபட்ச ஊதியத்தின் வாங்கும் சக்தி சுமார் 200 அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை இந்தப் பட்டியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது. பாகிஸ்தான் 68ஆவது இடத்திலும், நேபாளம் 78ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 89ஆவது இடத்திலும், இந்தியா 111ஆவது இடத்திலும் உள்ளன.
ஆசியாவில் தென் கொரியா 2,362 அமெரிக்க டொலர் என்ற வாங்கும் சக்தி மதிப்புடன் முன்னிலை வகிக்கிறது. ஜப்பான் 1,839 அமெரிக்க டொலர்களுடன் அடுத்த நிலையில் உள்ளது.
உலகளவில் சுவிட்சர்லாந்து முதலிடத்தைப் பெற்றுள்ளதுடன், அதன் மாதாந்த குறைந்தபட்ச ஊதியத்தின் வாங்கும் சக்தி 3,804 அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜெர்மனி, ஐக்கிய இராச்சியம், நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், ஐஸ்லாந்து, நியூசிலாந்து, பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளும் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன.
இலங்கைக்கு கீழே மேலும் 10 நாடுகள் மட்டுமே தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் காம்பியா 67 அமெரிக்க டொலர் என்ற மிகக் குறைந்த மதிப்பைப் பதிவு செய்துள்ளது.
இந்தத் தரவரிசையில் குறிப்பிடப்படும் தொகைகள் நேரடியாக அமெரிக்க டொலரில் வழங்கப்படும் சம்பளத்தை குறிக்கவில்லை என அறிக்கை தெளிவுபடுத்துகிறது. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள வாழ்க்கைச் செலவு மற்றும் வாங்கும் சக்தியை கருத்திற்கொண்டு Purchasing Power Parity (PPP) அடிப்படையில் மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், வரிகள் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் இந்தக் கணக்கீட்டில் சேர்க்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.





