ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 66 சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர் – ரூ.6,000 மில்லியன் சொத்துக்கள் முடக்கம்

2024 செப்டம்பர் 21ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 66 சந்தேகநபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை தலைமையகத்தின் தகவல்களின் அடிப்படையில், குறித்த சந்தேகநபர்களுடன் தொடர்புடைய 113 வழக்குகள் தொடர்பான விசாரணைகளின் மூலம் சுமார் 6,000 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அரச ஊடகமான சிலுமின செய்தி வெளியிட்டுள்ளது.

இதில், போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 102 சந்தேகநபர்களுக்குச் சொந்தமான சுமார் ரூ.5,423 மில்லியன் பெறுமதியான சொத்துக்களும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மூவருக்குச் சொந்தமான ரூ.209 மில்லியன் பெறுமதியான சொத்துக்களும் அடங்குகின்றன.

மேலும், பிரமிட் மோசடி, சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 8 பேருக்குச் சொந்தமான சுமார் ரூ.367 மில்லியன் பெறுமதியான சொத்துக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட சொத்துக்களில் 3,404 கிராம் தங்கம், 136 ஏக்கர் காணிகள், 55 வீடுகள் மற்றும் 142 வாகனங்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 66 சந்தேகநபர்களில் 28 பேருக்கு சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும், ஏனைய 38 பேருக்கு அவ்வாறான அறிவித்தல் பிறப்பிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 செப்டம்பர் முதல் இதுவரை சந்தேகநபர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இன்டர்போல் மூலம் இலங்கை பொலிஸாரினால் 110 புதிய சிவப்பு அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 18ஆம் திகதி நிலவரப்படி, இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்ட மொத்த சிவப்பு அறிவித்தல்களின் எண்ணிக்கை 236 ஆக உள்ளதுடன், அவற்றில் 96 அறிவித்தல்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வசிப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ள 35 சந்தேகநபர்களில் 18 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்திலும், 11 பேர் இந்தியாவிலும், மேலும் தலா ஒருவர் ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ரஷ்யா, கனடா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலும் இருப்பதாக காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore