இலங்கையில் இளநீர் உற்பத்தியை அதிகரித்து, ஏற்றுமதி சந்தையை விரிவுபடுத்தும் நோக்கில் அடுத்த மூன்று ஆண்டுகளில் நாடளாவிய ரீதியில் 250 ‘இளநீர் கிராமங்களை’ உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
‘Ceylon King Coconut Village’ எனும் தேசிய திட்டம் இன்று (02) குருநாகல் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
திட்டத்தின் கீழ் 2026ஆம் ஆண்டில் 75 கிராமங்களும், 2027ஆம் ஆண்டில் 80 கிராமங்களும், 2028ஆம் ஆண்டில் 95 கிராமங்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
இதன் மூலம் 2030ஆம் ஆண்டளவில் நாட்டின் வருடாந்த இளநீர் அறுவடையை 25 மில்லியனால் அதிகரிப்பதுடன், இளநீர் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி வருமானத்தை 12 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக உயர்த்துவதும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், ஏற்கனவே உள்ள இளநீர் மரங்களைப் புனரமைக்க ஒரு மரத்திற்கு 700 ரூபாய் நிதியுதவி வழங்கப்படவுள்ளது. புதிய பயிர்ச்செய்கைக்கான இளநீர் கன்றுகள் 750 ரூபாய் பெறுமதியுடையதாக இருந்தாலும், விவசாயிகளுக்கு 150 ரூபாய் மானிய விலையில் வழங்கப்படவுள்ளன.
2026ஆம் ஆண்டில் 20,300 மரங்களைப் புனரமைப்பதுடன், 37,500 புதிய கன்றுகளை நடவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. 2026 முதல் 2028 வரையான காலப்பகுதியில் மொத்தமாக 212,500 புதிய கன்றுகளை நடவு செய்து, 221,500 மரங்களைப் புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் இளநீர் உற்பத்தி, சேகரிப்பு, போக்குவரத்து, பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி துறைகளில் புதிய வேலைவாய்ப்புகளையும் வருமான வாய்ப்புகளையும் உருவாக்கி, சுமார் 21,250 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
மேலும், இளநீர் உற்பத்தியாளர்கள், சேகரிப்பாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான தரவுத்தளம் உருவாக்குதல், 500 ஏக்கர் பயிர்ச்செய்கைக்கு நீர்ப்பாசன வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.





