பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா தோட்டத்தில், தேயிலை கொழுந்து கொய்துகொண்டிருந்த பெண் தொழிலாளியொருவர் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
இன்று (04) இடம்பெற்ற இச்சம்பவத்தில், புதருக்குள் இருந்து திடீரென பாய்ந்த பெரிய அளவிலான சிறுத்தை, குறித்த பெண்ணின் கழுத்து மற்றும் கைப் பகுதிகளில் தாக்கியுள்ளது.

தாக்குதலையடுத்து பெண் தொழிலாளி தரையில் விழுந்த நிலையில், அருகிலிருந்த ஏனைய தொழிலாளர்கள் கூச்சலிட்டதைத் தொடர்ந்து சிறுத்தை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
காயமடைந்த பெண் முதற்கட்ட சிகிச்சைக்காக பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கருத்துப்படி, தேயிலைத் தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் வளர்ப்பு நாய்களை அழைத்துச் செல்வதால், அவற்றை இரையாக்குவதற்காக சிறுத்தைகள் அப்பகுதிக்கு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
⚠️ தேயிலைத் தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





