அங்குலான கடற்பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற கடற்படை படகு விபத்தில் காணாமல் போன கடற்படை அதிகாரி ஒருவருடையது என சந்தேகிக்கப்படும் சடலம் இன்று (04) மீட்கப்பட்டுள்ளது.
கடற்படை சுழியோடிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது, இன்று காலை குறித்த சடலம் கடலில் இருந்து மீட்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15ஆம் திகதி, 12 கடற்படை வீரர்களுடன் பயணித்த அதிவேக தாக்குதல் படகு அங்குலான கடற்பகுதியில் விபத்துக்குள்ளானது.
விபத்தைத் தொடர்ந்து 11 கடற்படை வீரர்கள் அங்குலான பொலிஸார் மற்றும் உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டிருந்தனர்.
எனினும், காணாமல் போன மற்றுமொரு கடற்படை அதிகாரியைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தன.
பானந்துறை முதல் கொழும்பு ஊடாக சிலாபம் வரையிலான கடலோரப் பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
📌 மீட்கப்பட்ட சடலம் காணாமல் போன கடற்படை அதிகாரியுடையதா என்பது தொடர்பில் மேலதிக உறுதிப்படுத்தல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.





