ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் அமர்வை முன்னிட்டு, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான தன்னிச்சையான கைதுகள் மற்றும் நீண்டகால தடுப்புக்காவல் தொடர்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டத்தை இடைக்காலமாக நிறுத்தி, அதற்குப் பதிலாக புதிய சட்டத்தை உருவாக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், தடுப்புக்காவலில் இடம்பெறும் மரணங்கள், சித்திரவதை குற்றச்சாட்டுகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எதிர்கொள்ளும் கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவித்தல், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமைக்கு தீர்வு காணுதல் மற்றும் கருத்துச் சுதந்திரம் தொடர்பான சட்டங்களில் மாற்றங்களை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.





