பசிபிக் பெருங்கடலில் வலுவான எல் நினோ (El Niño) காலநிலை நிகழ்வு உருவாகி வரும் நிலையில், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தீவிர வானிலைச் சூழ்நிலைகளுக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என பிரிட்டன் சுற்றுச்சூழல் அமைச்சர் டேம் ஏஞ்சலா ஈகிள் தெரிவித்துள்ளார்.
எல் நினோவின் தாக்கத்தால் பிரிட்டனில் வழக்கத்தை விட வறட்சியான கோடைக்காலம், அதிக மழையுடன் கூடிய குளிர்காலம் மற்றும் தீவிரமான புயல்கள் ஏற்படக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார். அவசரநிலை ஏற்பட்டால் மீட்புச் சேவைகள் சென்றடையும் வரை குடும்பங்களுக்குத் தேவையான அடிப்படை உணவுப் பொருட்கள் கையிருப்பில் இருப்பது உதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பிரிட்டனின் உணவு விநியோகச் சங்கிலி தொடர்பாக தேசிய கணக்காய்வு அலுவலகம் (NAO) வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவிர வானிலை, இணையத் தாக்குதல்கள் மற்றும் தாவரங்கள் அல்லது மனிதர்களிடையே ஏற்படும் நோய்த்தொற்றுகள் போன்ற காரணிகளால் உணவு விநியோகம் பாதிக்கப்படக்கூடிய நிலை குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.
உணவு விநியோகத்தில் ஏற்படும் தடைகள் உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்கச் செய்வதுடன், குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையில், அவசரகால நிலைமைகளுக்கு குடும்பங்கள் எவ்வாறு தயாராக வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டுதல்களை இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிட பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது.





