போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை இணையவழியாக செலுத்தும் Gov Pay சேவையைப் போன்ற போலி இணையதளங்களை உருவாக்கி பொதுமக்களை ஏமாற்றும் மோசடி தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போலி இணையதளங்களுக்கான இணைப்புகள் SMS மற்றும் WhatsApp செய்திகள் ஊடாக பொதுமக்களுக்கு அனுப்பப்படுவதாகவும், அவற்றின் மூலம் பணம் மற்றும் தனிப்பட்ட முக்கியத் தகவல்களை மோசடியாளர்கள் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Gov Pay மூலம் போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்கு அதிகாரப்பூர்வ சேவையை மட்டுமே பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகளைத் திறப்பதையும், அதில் வங்கி அல்லது தனிப்பட்ட தகவல்களை உள்ளிடுவதையும் தவிர்க்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர, இவ்வாறான போலி இணையதளங்கள் மூலம் இடம்பெறும் நிதி மோசடிகளில் சிக்காமல் பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.





