போரின் இறுதிக்கட்டத்தில் உயிரிழந்த இராணுவ வீரரான ஸ்டாஃப் சார்ஜன்ட் எச்.பி.எஸ். பண்டாரவின் குடும்பத்தினரை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன சந்தித்துள்ளார்.
ஹேவடிவெல, துல்முனே பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற இராணுவத் தளபதி, பண்டாரவின் மனைவி தர்ஷனி நயனா வீரகொட மற்றும் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து அவர்களின் நலன் மற்றும் எதிர்காலத் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.
இராணுவத் தகவல்களின்படி, 4ஆவது விஜயபாகு காலாட்படை படைப்பிரிவில் பணியாற்றிய ஸ்டாஃப் சார்ஜன்ட் பண்டார, 2009 மே 17ஆம் திகதி நந்திக்கடல் களப்புப் பகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட மோதலின்போது சக வீரர்களை பாதுகாப்பதற்காக எதிரியின் தாக்குதல்களுக்கு மத்தியில் துணிச்சலுடன் செயற்பட்டு உயிரிழந்துள்ளார்.
அவரது வீரச் செயலுக்காக மரணத்திற்குப் பின்னர் பரம வீர விபூஷணய மற்றும் ரண சூர பதக்கம் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
குடும்பத்தினரின் நலன் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்துவதுடன், தேவையான ஆதரவை இராணுவம் வழங்கும் என இராணுவத் தளபதி உறுதியளித்துள்ளார்.





