ரஷ்யா, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஜேர்மனியின் துணைத் தூதரகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, எதிர்வரும் செப்டெம்பர் 18ஆம் திகதிக்குள் துணைத் தூதரகத்தின் செயற்பாடுகளை நிறுத்துவதுடன், அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் அதே திகதிக்குள் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜேர்மனி, பொன்னில் உள்ள ரஷ்ய துணைத் தூதரகத்தையும் பேர்லினில் உள்ள ரஷ்ய ஹவுஸ் கலாசார நிலையத்தையும் மூடுவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு பதிலடியாக ரஷ்யா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஆகஸ்ட் 4ஆம் திகதி லீப்சிக்/ஹாலே விமான நிலையத்தில் இடம்பெற முயற்சிக்கப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு ரஷ்யாவே பொறுப்பு என ஜேர்மனி குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனினும், ரஷ்யா அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
மேலும், ரஷ்யாவில் செயல்படும் ஜேர்மனியின் Goethe-Institut கலாசார நிலையங்களையும் மூடுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளதுடன், அவற்றின் ஊழியர்கள் செப்டெம்பர் 13ஆம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள இந்த புதிய பதற்றத்திற்கு ஜேர்மனியே காரணம் என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது. அதேவேளை, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் துணைத் தூதரகம் மூடப்படுவது வருத்தமளிக்கும் நடவடிக்கை என ஜேர்மனி தெரிவித்துள்ளது.





