கிரிக்கெட் போட்டிகளில் தொடரும் பந்தய விளம்பரங்கள் – ஆய்வாளர் கேள்வி

இலங்கையில் உரிமம் பெறாத இணையவழி சூதாட்ட தளங்களுக்கு எதிராக கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இலங்கை கிரிக்கெட் போட்டிகளின் ஒளிபரப்புகளில் பந்தய நிறுவனங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் விளம்பரங்கள் தொடர்ந்து இடம்பெறுவது குறித்து மூத்த ஆய்வாளர் கலாநிதி சஞ்சன ஹட்டோட்டுவ கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இலங்கை – இந்தியா இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முக்கிய தருணங்கள் அடங்கிய காணொளிகளை ஆய்வு செய்த அவர், 1xBAT என்ற விளம்பரச் சின்னம் ஐந்து தனித்தனி தினசரி ஹைலைட்ஸ் காணொளிகளில் சுமார் 14 நிமிடங்கள் திரையில் தோன்றியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த ஐந்து காணொளிகளும் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நேரத்தில் மொத்தமாக 6.29 இலட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் காலி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் ஹைலைட்ஸ்களையும் இணைத்துப் பார்க்கும்போது, 10 காணொளிகளில் 1xBAT விளம்பரம் சுமார் 25 நிமிடங்கள் பார்வையாளர்களை சென்றடைந்ததாக ஆய்வாளர் மதிப்பிட்டுள்ளார். அந்த காணொளிகள் மொத்தமாக சுமார் 20 இலட்சம் பார்வைகளை பெற்றிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

SSC போட்டியின் போது விக்கெட்டுக்குப் பின்னால் வைக்கப்பட்ட விளம்பரப் பலகை, எல்லைப் பகுதியில் காணப்பட்ட விளம்பரங்கள் மற்றும் sight-screen பகுதிகளில் 1xBAT குறியீடு இடம்பெற்றிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், Parimatch Sports மற்றும் batbricks7 உள்ளிட்ட விளம்பரங்களும் போட்டியின் போது காணப்பட்டதாகவும், இவை வெளிநாடுகளை மையமாகக் கொண்ட இணையவழி பந்தய நடவடிக்கைகளுடன் தொடர்புடைய surrogate brands என தாம் கருதுவதாகவும் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உரிமம் பெறாத இணையவழி சூதாட்ட தளங்களுக்கான அணுகலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற விளம்பரங்கள் தேசிய கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒளிபரப்புகள் மற்றும் ஹைலைட்ஸ் மூலம் பரவலாக மக்களை சென்றடைவது எவ்வாறு சாத்தியமாகிறது என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு முன்னதாக 1xbet.com உள்ளிட்ட சில சூதாட்ட இணையத்தளங்களுக்கான அணுகலைத் தடுக்க நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1xBAT என்பது 1xBet உடன் தொடர்புடைய surrogate brand என தாம் கருதுவதாகவும், இந்தத் தொடர்பு குறித்து இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் செயலாளர் ஒருவராலும் முன்னர் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் ஹட்டோட்டுவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2025ஆம் ஆண்டின் இலக்கம் 17 கொண்ட Gambling Regulatory Authority Act மூலம் உரிமம் பெறாத இணையவழி சூதாட்ட நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் விளம்பரங்களை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் நிறுவனம், இலங்கை எல்லைக்குள் நடைபெறும் தனது போட்டிகளில் பந்தய விளம்பரங்களை அனுமதிப்பதில்லை என முன்னர் தெரிவித்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனால், ஒருபுறம் சூதாட்ட இணையத்தளங்களை முடக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், மறுபுறம் அவற்றுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மாற்றுப் பிராண்டுகளின் விளம்பரங்கள் கிரிக்கெட் ஒளிபரப்புகள் மூலம் பெருமளவில் வெளிப்படுவது, நாட்டில் இணையவழி சூதாட்ட விளம்பரக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் விதம் தொடர்பில் பரந்த கேள்விகளை எழுப்புவதாக ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore