இஸ்ரேல் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் நூற்றுக்கணக்கானோரின் எதிர்காலம் கேள்விக்குறி – சஜித்

இஸ்ரேலில் உட்கட்டமைப்பு துறையில் வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இலங்கையர்களின் நம்பிக்கையை “வேலைவாய்ப்பு மோசடி வலையமைப்பு” சிதைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பொல்துவ சந்திப்புப் பகுதியில் இஸ்ரேல் உட்கட்டமைப்பு வேலைவாய்ப்புக்காக விண்ணப்பித்தவர்கள் முன்னெடுத்திருந்த போராட்டத்தை இன்று பார்வையிட்ட அவர், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

இஸ்ரேல் வேலைவாய்ப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்தின் அணுகுமுறை போதுமானதாக இல்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.

கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்பை எதிர்பார்த்திருந்த 3,500க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்காக ஏற்கனவே குரல் கொடுத்ததாகவும், உட்கட்டமைப்புத் துறையில் விண்ணப்பித்தவர்களில் பலர் பொலிஸ் அறிக்கைகளைப் பெற்று தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தபோதிலும், இரண்டு ஆண்டுகளாக வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இஸ்ரேல் உட்கட்டமைப்பு லொட்டரி விண்ணப்பதாரர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் உரையாற்றிய அவர், தற்போது 560 பேர் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பதாகவும், மேலும் 1,200 பேர் லொட்டரி முறையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் ஊடான வேலைவாய்ப்பு திட்டங்கள் மந்தமாக முன்னெடுக்கப்படுவதாகவும், தனியார் நிறுவனங்களின் திட்டங்கள் வேகமாக செயல்படுவதால் விண்ணப்பதாரர்களிடையே சமத்துவமற்ற நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், அரசாங்க வழிமுறையின் ஊடாக இஸ்ரேலுக்குச் செல்ல முயற்சிக்கும் ஒருவருக்கு சுமார் 10 இலட்சம் ரூபாய் செலவாகும் நிலையில், தனியார் நிறுவனங்களின் ஊடாகச் செல்பவர்களிடம் சுமார் 35 இலட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நடைமுறையில் மோசடி மற்றும் விண்ணப்பதாரர்களை சுரண்டுதல் இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டிய சஜித் பிரேமதாச, இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

முறைமையை மாற்றுவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ள நிலையில், வேலைவாய்ப்பு தேடுபவர்களை பாதிக்கும் முறைகளை நீக்கி, சுமார் 10 இலட்சம் ரூபாய் செலவில் இஸ்ரேலுக்குச் செல்லக்கூடிய வெளிப்படையானதும் நியாயமானதுமான திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், ஏமாற்றும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஊழல் மற்றும் மோசடிகளிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு விண்ணப்பதாரர்களைப் பாதுகாக்க வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore