இலங்கையிலிருந்து தாய்லாந்துக்கு தொழிலாளர்கள் செல்வதை ஒழுங்குபடுத்தவும், அவர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கவும் புதிய தொழிலாளர் ஒத்துழைப்பு உடன்படிக்கையை ஏற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையே 5 ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றும், தாய்லாந்தில் இலங்கைத் தொழிலாளர்கள் பணியாற்றுவதற்கான கூடுதல் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்படவுள்ளன.
புதிய ஏற்பாடுகளின் மூலம் இலங்கைத் தொழிலாளர்களை வெளிப்படையான முறையில் ஆட்சேர்ப்பு செய்து தாய்லாந்துக்கு அனுப்புவதற்கான நடைமுறைகள் உருவாக்கப்படவுள்ளன.
மேலும், தாய்லாந்தில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களின் சட்ட உரிமைகள் மற்றும் நலன்களை உறுதி செய்வதுடன், மனிதக் கடத்தல் மற்றும் தொழிலாளர் சுரண்டலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதேவேளை, இலங்கைப் பிரஜைகளுக்கான தாய்லாந்தின் விசா இல்லாத பயண வசதி தொடர்பான புதிய மாற்றங்கள் குறித்தும் இரு நாடுகளுக்கும் இடையே கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 15, 2026 முதல் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் தாய்லாந்து செல்ல முன்கூட்டியே விசா பெற்றிருக்க வேண்டும் என தாய்லாந்து தூதரகத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய நடைமுறையின் கீழ் விசா விண்ணப்பங்கள் இணையவழி e-Visa முறையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இந்நிலையில், தொழிலாளர் ஒத்துழைப்பு மற்றும் விசா தொடர்பான விடயங்களைப் பற்றி மேலும் கலந்துரையாடுவதற்காக இலங்கை அமைச்சர் செப்டம்பர் 14ஆம் திகதி தாய்லாந்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





