பிரித்தானியாவின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று புதன்கிழமையும் விமான சேவைகளில் தாமதங்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு சேவையை வழங்கும் NATS நிறுவனத்தின் விமானத் தரவு செயலாக்க அமைப்பில் ஏற்பட்ட கோளாறே இந்த பாதிப்புக்குக் காரணமாகும்.
🔹 1,000 வரை விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக FlightRadar24 தெரிவித்துள்ளது.
🔹 பல்லாயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
🔹 Ryanair நிறுவனத்தின் 65,000-க்கும் மேற்பட்ட பயணிகள் 8 மணி நேரம் வரை தாமதத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔹 Heathrow, Gatwick, Manchester மற்றும் Birmingham விமான நிலையங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
🔹 EasyJet சுமார் 200 விமானங்களையும், British Airways 100-க்கும் மேற்பட்ட விமானங்களையும் இரத்து செய்துள்ளன.
🔹 Heathrow விமான நிலையத்தை நோக்கிச் சென்ற 13 விமானங்கள் பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவின் பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
NATS நிறுவனத்தின் தலைமை நிர்வாகி Martin Rolfe, ஏற்பட்ட பாதிப்புக்கு மன்னிப்புக் கோரியுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த தொழில்நுட்பக் கோளாறு சைபர் தாக்குதலால் ஏற்பட்டதல்ல என பிரித்தானிய போக்குவரத்துத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
கோளாறு சரிசெய்யப்பட்டாலும், ஏற்கனவே உருவாகியுள்ள விமானப் பயண பின்னடைவு (backlog) காரணமாக சேவைகள் வழமைக்குத் திரும்புவதற்கு மேலும் காலம் தேவைப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
👉 பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் தங்களது விமானத்தின் நிலையை சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடம் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





