இலங்கையில் வருடாந்தம் 1,000 சிறார்களுக்கு புற்றுநோய் பாதிப்பு

இலங்கையில் பிறந்தது முதல் 19 வயது வரையிலான சுமார் 900 முதல் 1,000 சிறார்கள் வருடாந்தம் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் டொக்டர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.

குழந்தைப் பருவ புற்றுநோய் தொடர்பாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறார்களிடையே அதிகளவில் லியுகேமியா (இரத்தப் புற்றுநோய்), லிம்போமா (நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோய்), மூளைப் புற்றுநோய், எலும்புப் புற்றுநோய் மற்றும் கண் புற்றுநோய் போன்றவை பதிவாகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய புற்றுநோய் பதிவேட்டின் தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டில் இலங்கையில் பதிவான புற்றுநோய் நோயாளிகளில் 904 பேர் சிறார்கள் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 15 ஆண்டுகளாக சிறார்களுக்கான புற்றுநோய் எண்ணிக்கை பொதுவாக 600 முதல் 800 வரையிலான மட்டத்தில் இருந்த நிலையில், அண்மைய ஆண்டுகளில் சுமார் 900 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறார்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களுக்கு குறிப்பிட்ட ஒரே காரணம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சையை வழங்குவதன் மூலம் குணமடையும் வாய்ப்பு அதிகரிக்கும் என டொக்டர் சுராஜ் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

சிறார்கள் மற்றும் பருவ வயதினரிடையே புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செப்டம்பர் மாதம் உலகளாவிய ரீதியில் குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore