நாட்டில் 16,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்கும் வகையில் புதிய விடுதி நிர்மாணத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) விடுதி மறுசீரமைப்புக்காக 376 மில்லியன் ரூபாயையும், 2026ஆம் ஆண்டில் 453 மில்லியன் ரூபாயையும் ஒதுக்கியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் 2026ஆம் ஆண்டில் விடுதி மறுசீரமைப்புக்காக 400 மில்லியன் ரூபாயும், புதிய விடுதிகளை நிர்மாணிப்பதற்காக 1,500 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், 2025, 2026 மற்றும் அதற்குப் பின்னரும் மொத்தம் 55 புதிய மாணவர் விடுதிகள் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களுக்கு வெளியிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு, குறிப்பாக வவுனியா, யாழ்ப்பாணம் – கிளிநொச்சி வளாகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் மற்றும் சபரகமுவ பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மாணவர் தங்குமிடங்கள் தொடர்பான தேசிய கொள்கையொன்றை UGC தயாரித்து வருவதாகவும் அவர் கூறினார். இந்தக் கொள்கையில் தனியார் மாணவர் விடுதிகளும் உள்ளடக்கப்படவுள்ளன.
தனியார் விடுதிகளுக்கான சுகாதாரம், பாதுகாப்பு, அணுகல்தன்மை, கட்டண வசதி மற்றும் மாணவர் நலன் தொடர்பான குறைந்தபட்ச தரநிலைகள் இதுவரை முறையாக வகுக்கப்படாத நிலையில், புதிய கொள்கையின் மூலம் இவ்விடயங்களுக்கு உரிய தரநிலைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
மேலும், தனியார் விடுதிகளை கண்காணிக்கவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும், விதிமுறைகளை மீறும் விடுதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் விசேட குழுவொன்று அமைக்கப்படவுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.





