இலங்கையின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட மதிப்பாய்வுக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகள் குழு இன்று (10) இலங்கைக்கு வருகை தரவுள்ளது.
IMF குழு எதிர்வரும் செப்டெம்பர் 23ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து அரசாங்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளது.
இலங்கைக்கான IMF தூதுக்குழுவின் தலைவர் இவான் பாப்பஜோர்ஜியோ தெரிவித்துள்ளதன்படி, இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம், IMF இன் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கைக்கு ஆதரவளிக்கும் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் 7ஆவது ஒருங்கிணைந்த மதிப்பாய்வு மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான உறுப்புரை IV ஆலோசனைகள் தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதாகும்.
இதன்போது, பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம், பொருளாதார நிலைத்தன்மையைப் பேணுவதற்கான நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் தற்போதைய பேரண்டப் பொருளாதார நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் விரிவாக ஆராயப்படவுள்ளன.
மதிப்பாய்வு நிறைவடைந்த பின்னர், IMF குழுவினால் அதன் முதற்கட்ட அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, IMF குழுவின் தலைவர் இவான் பாப்பஜோர்ஜியோ தலைமையிலான குழு கடந்த ஜூன் 24 முதல் 30ஆம் திகதி வரை கொழும்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தது.
IMF கடன் திட்டத்தின் கீழ் இதுவரை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த நிதி ஆதரவு சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





