இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகளை விடுவிக்குமாறு, இலங்கையில் வசிக்கும் ரோஹிங்கியா அகதி ஒருவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில் கோரிக்கை விடுத்துள்ளார்.
Pax Romana அமைப்பின் சார்பில் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய மொஹமட் அன்வர் என்ற ரோஹிங்கியா அகதி, தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் (UNHCR), சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புகளின் அணுகலை தடையின்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ரோஹிங்கியா அகதிகளை “சட்டவிரோத குடியேறிகள்” என அடையாளப்படுத்தக் கூடாது எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
2024ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் யாழ்ப்பாணத்திற்கு அப்பால் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் ரோஹிங்கியா அகதிகள் மீட்கப்பட்ட சம்பவத்தையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
அத்துடன், இலங்கையில் தங்கியுள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு வாழ்வாதாரம், வீடு, உணவு, கல்வி மற்றும் சுகாதார சேவைகள் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குடியுரிமையற்ற நிலையில் வாழ்ந்து வருவதுடன், துன்புறுத்தல் மற்றும் இடம்பெயர்வுக்கு முகங்கொடுத்துள்ள ரோஹிங்கியா மக்களில், வேறு நாடுகளில் மீள்குடியேற்றம் செய்ய முடியாதவர்களுக்கு குடியுரிமை அல்லது நிரந்தர வதிவிட உரிமை வழங்குவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோஹிங்கியா அகதிகளுக்கு ஆதரவளிக்கும் இலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு எதிரான துன்புறுத்தல், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.





