இலங்கையும் பாலஸ்தீனமும் தங்களுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தி, இராஜதந்திரம், பொருளாதாரம், கல்வி மற்றும் மனிதாபிமான ஒத்துழைப்பை விரிவுபடுத்த இணக்கம் தெரிவித்துள்ளன.
இலங்கையின் பாலஸ்தீன பிரதிநிதி பாரூக் மொஹமட் பவ்ஸர், ரமல்லாவில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் ரமல்லா மற்றும் அல்-பீரே ஆளுநர் டாக்டர் லைலா கன்னம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, பாலஸ்தீன மக்களின் உரிமைகள் மற்றும் நியாயமான தீர்வுக்கான இலங்கையின் நீண்டகால ஆதரவை பவ்ஸர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் வாய்ப்புகளை ஊக்குவிக்கும் வகையில் ரமல்லாவில் இலங்கை தொழிற்பயிற்சி நிறுவனம் தொடர்பான திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து இலங்கை ஆர்வம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறிப்பாக காசா பகுதிக்கான மனிதாபிமான உதவிகள் மற்றும் UNRWA அமைப்புக்கான இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில், Sri Lanka Expo 2027 தொடர்பான தகவல்களும் பகிரப்பட்டுள்ளன. பாலஸ்தீன வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வர்த்தக சம்மேளனங்களுடன் இணைந்து இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம், சுற்றுலா மற்றும் சந்தை வாய்ப்புகளை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் தொடர்ச்சியான அரசியல் மற்றும் மனிதாபிமான ஆதரவுக்கு நன்றி தெரிவித்த பாலஸ்தீன தரப்பு, வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதன்போது, வர்த்தகம், தொழிற்பயிற்சி, கலாசார பரிமாற்றம் மற்றும் மக்கள்-மக்கள் தொடர்புகளை மேம்படுத்தி, இலங்கை–பாலஸ்தீன உறவுகளை மேலும் வலுப்படுத்த இருதரப்பும் உறுதி தெரிவித்துள்ளன.





