இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கை வந்துள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்களான அரவிந்த டி சில்வா, சனத் ஜயசூரிய மற்றும் சமிந்த வாஸ் ஆகியோரை சந்தித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பைத் தொடர்ந்து, இலங்கை முன்னாள் வீரர்களின் சிறப்பான கிரிக்கெட் பங்களிப்பை ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.
அவர்கள் தங்களது அபாரமான ஆட்டத்தால் இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
1996 உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் முக்கிய வீரர்களாக அரவிந்த டி சில்வா மற்றும் சனத் ஜயசூரிய ஆகியோர் திகழ்ந்ததுடன், சமிந்த வாஸ் அந்த உலகக் கிண்ணத்தை வென்ற அணியின் உறுப்பினராகவும் இருந்தார்.
இலங்கை விஜயத்தின் போது இந்த மூன்று முன்னாள் வீரர்களையும் சந்தித்தது மகிழ்ச்சியளிப்பதாக ராஜ்நாத் சிங் சமூக ஊடகப் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான நீண்டகால கிரிக்கெட் மற்றும் மக்கள் தொடர்புகளின் மற்றுமொரு சிறப்பான தருணமாக அமைந்துள்ளது.





