பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக போதைப்பொருட்களை மறைத்து இரண்டு கொள்கலன்களில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் சில குறைபாடுகள் மற்றும் கவனயீனங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இரண்டு கொள்கலன்களும் கொழும்பு துறைமுகத்தின் CICT முனையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பான பிரதான விசாரணையை மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகம் (CCIB) முன்னெடுத்து வருகிறது.
இதனிடையே, விசாரணை நடவடிக்கைகளில் அவதானிக்கப்பட்ட குறைபாடுகள் தொடர்பில், பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் உள்வாரியான விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த உள்வாரி விசாரணையானது போதைப்பொருட்களுடன் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ள இரண்டு கொள்கலன்கள் தொடர்பாக CCIB மேற்கொண்டு வரும் பிரதான விசாரணைக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தாது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், குறித்த போதைப்பொருள் விவகாரம் தொடர்பான பிரதான விசாரணை மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து விடயங்களையும் கண்டறியும் வகையில் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.





