இனவாத மோதல்கள் இன்றி 2 ஆண்டுகள் – அரசாங்கத்திற்கு உலமா சபை பாராட்டு!
இலங்கையில் எந்தவொரு சமூகமும் தனது கலாசார அடையாளத்துடன் வாழும்போது பாதுகாப்பின்மை அல்லது அச்சத்தை எதிர்கொள்ளாத சூழலை உருவாக்குவது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியல் நோக்கங்களுடன் முன்னெடுக்கப்படும் இனவாதப் போக்குகள் மற்றும் சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகளை சரியாகப் புரிந்துகொண்டு, எதிர்காலத்தில் இனவாத மோதல்கள் மீண்டும் ஏற்படாத வகையில் செயற்படுவது அனைவரினதும் பொறுப்பு என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகளுடன் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் இனவாத மோதல்கள் ஏற்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்கவில்லை என குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசாங்கத்தின் மீது சில தரப்பினரால் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்போது, நாட்டினதும் மக்களினதும் நலனுக்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உலமா சபை பிரதிநிதிகள் பாராட்டு தெரிவித்ததுடன், தமது முழுமையான ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, இளைஞர்களை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் “முழுநாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டம் மற்றும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இனவாத மோதல்கள் இன்றி கடந்த இரண்டு ஆண்டுகளை கடந்து வந்தமைக்கு அரசாங்கத்தை பாராட்டிய உலமா சபை பிரதிநிதிகள், அதேவேளை சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்படும் வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
ஜனநாயக சமூகத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் தீர்மானங்களை விமர்சிப்பதற்கும் கேள்விக்குட்படுத்துவதற்கும் மக்களுக்கு முழுமையான உரிமை இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, ஆனால் இனங்களுக்கிடையே வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரும் பின்னரும் முஸ்லிம் சமூகத்தை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்கள், அத்துடன் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் உலமா சபை பிரதிநிதிகள் கலந்துரையாடியுள்ளனர்.
இஸ்லாமிய நூல்கள், கல்வி சார்ந்த விடயங்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்புடன் தொடர்புடைய சில பிரச்சினைகள் குறித்தும் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. அவற்றை கலந்துரையாடல் மற்றும் தொழில்நுட்ப வழிமுறைகள் மூலம் தீர்ப்பது தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
தேசிய மட்டத்திலான நிறுவனங்களில் முஸ்லிம் சமூகம் உட்பட அனைத்து சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டியதன் முக்கியத்துவமும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.
அனைத்து சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்தினர் எதிர்கொண்ட பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், சீருடை உள்ளிட்ட நிர்வாக அல்லது தொழில்நுட்ப பிரச்சினைகள் இன அல்லது மத ரீதியான பதற்றங்களுக்கு காரணமாக மாறாத வகையில் அவற்றை உரிய முறையில் தீர்ப்பது அவசியம் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.





