அரசும் எதிர்க்கட்சியும் நேருக்கு நேர் – இரு நகரங்களில் பேரணி

இலங்கையின் முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்களான பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் இன்று (12) ஒரே நேரத்தில் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளின் இரு பிரதான அரசியல் பேரணிகள் நடைபெறவுள்ளமை அரசியல் களத்தில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுகால ஆட்சியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடர் பேரணிகளின் ஒரு பகுதியாக, பொலன்னறுவையில் இன்று பிற்பகல் 4 மணிக்கு பிரம்மாண்ட விவசாயிகள் பேரணி நடைபெறவுள்ளது.

‘மக்கள் ஆட்சி – இரண்டு ஆண்டுகள் பலமாக, அனைவருக்கும் முன்னேற்றம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்தப் பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிரதான உரையாற்றவுள்ளார்.

பொலன்னறுவை பேரணி விவசாயிகள் மற்றும் விவசாயத்துறை சார்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றங்கள் மற்றும் எதிர்வரும் ஆண்டுகளுக்கான திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணி இன்று பிற்பகல் 2 மணிக்கு அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.

கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பேரணியில் பொதுஜன பெரமுனவிலிருந்து விலகிச் சென்ற பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்டோர் கலந்துகொள்வதுடன், மேடையில் உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட ஏனைய எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்களும் பேரணியில் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரும் இதில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு வடமத்திய மாகாணத்தின் பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய இரு பிரதான மாவட்டங்களில் அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் ஒரே நாளில் தனித்தனியாக பேரணிகளை நடத்தவுள்ளமை அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore