ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகனங்களின் ‘ஸ்மார்ட் கீ’கள் திருட்டு – இருவர் கைது

ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் ‘ஸ்மார்ட் கீ’களை திருடி விற்பனை செய்ததாகக் கூறப்படும் துறைமுக ஊழியர் ஒருவரும், அவற்றை கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் வியாபாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று (11) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்மார்ட் கீகள் காணாமல் போனமை தொடர்பில் ஹம்பாந்தோட்டை துறைமுகப் பாதுகாப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின்போது, துறைமுக ஊழியர் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த ஊழியர் திருடப்பட்ட ஸ்மார்ட் கீகளை குருநாகல் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு வாகன வகைக்கு ஏற்ப ரூ.6,000 முதல் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கடந்த சில மாதங்களில் சுமார் 45 ஸ்மார்ட் கீகளை விற்பனை செய்து, ரூ.15 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தை குறித்த ஊழியர் பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துறைமுக ஊழியரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஸ்மார்ட் கீகளை கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் குருநாகல் பகுதி வியாபாரியும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து சில ஸ்மார்ட் கீகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக இறக்குமதி செய்ய ஆரம்பித்த காலத்திலிருந்தே இந்த மோசடி இடம்பெற்றிருக்கலாம் என துறைமுகப் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அஜித் பிரியந்தவின் அறிவுறுத்தலின் பேரில், குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore