ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளில் சாதனைப் பதிவு
மக்களின் நலனை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச மட்டம் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்திலும் சம்மாந்துறை பிரதேச செயலகம் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

2025ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சேவைகளின் ஊடாக பொதுமக்களுக்கு மருத்துவ மற்றும் மருத்துவம் அல்லாத உதவிகளை விரைவாக வழங்கியமைக்காக சம்மாந்துறை பிரதேச செயலகம் இந்தச் சிறப்பை பெற்றுள்ளது.
இதனை கௌரவிக்கும் வகையில், ஜனாதிபதி நிதியத்தின் கீழ் சிறப்பாகச் சேவையாற்றிய பிரதேச செயலகங்களுக்கான கிழக்கு மாகாண கௌரவிப்பு நிகழ்வு இன்று (12.09.2026) மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக ராஜதுரை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் முதலிடம் பெற்ற சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் சார்பில் பிரதேச செயலாளர் எஸ். எல். முஹம்மது ஹனீபா, உதவி பிரதேச செயலாளர் வி. வாசித் அஹமட், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ. எம். எம். சாபீர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் மௌலவி எம். ரிபாஸ் ஆகியோர் விருதைப் பெற்றுக்கொண்டனர்.
இதுவரை ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் 27 மருத்துவ உதவிகளும், 20 மருத்துவம் அல்லாத உதவிகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பிரதேச செயலாளரின் அர்ப்பணிப்பான வழிகாட்டலுடன், சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைந்த முயற்சியும் பொதுமக்களின் விண்ணப்பங்களை விரைவாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுத்தமையும் இந்தச் சாதனைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் இந்த சாதனை, மக்கள் நலச் சேவைகளில் மேலும் பல முன்னேற்றங்களுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.





