ஈராக்கில் இருந்து ஏவப்பட்டதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, சவூதி அரேபியா தனது முக்கியமான East-West எண்ணெய் குழாயின் செயல்பாட்டை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
சுமார் 1,200 கிலோமீற்றர் நீளமுடைய இந்தக் குழாய், ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்த்து சவூதி அரேபிய எண்ணெயை ஏற்றுமதி செய்ய உதவும் முக்கிய பாதையாகும்.
தாக்குதல் ஈரானுடனான எல்லைப் பகுதிக்கு அருகிலுள்ள ஈராக்கின் மைசான் மாகாணத்திலிருந்து நடத்தப்பட்டதாக உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த ஈராக்கு நடவடிக்கை எடுத்துள்ளது. தாக்குதலுக்குப் பின்னர் மைசான் மாகாணத்தின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி ஒருவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் சிலர் காயமடைந்ததுடன், குழாய்ப் பாதைக்கு சேதமும் ஏற்பட்டுள்ளதாக சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேதத்தின் முழுமையான அளவு இன்னும் மதிப்பிடப்பட்டு வருகிறது.
இதனிடையே, யேமனில் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் கடற்கரையின் பெரும்பகுதியைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், உலகளாவிய எண்ணெய் விநியோகப் பாதைகள் தொடர்பான அச்சமும் அதிகரித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. மேலும், சவூதி எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் தடைகள் தொடருமானால் எண்ணெய் விலை மேலும் உயரக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.





