ஆசியக் கிண்ணத்தை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி – மேடையில் காத்திருந்த ACC தலைவர்!

துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி, ஆசிய கிரிக்கெட் பேரவையின் (ACC) தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து கிண்ணத்தை பெற்றுக்கொள்ள மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரிசளிப்பு நிகழ்வின்போது, சம்பியன் கிண்ணத்தை வழங்குவதற்காக மொஹ்சின் நக்வி உள்ளிட்ட அதிகாரிகள் மேடையில் காத்திருந்த நிலையில், இந்திய வீராங்கனைகள் எவரும் கிண்ணத்தைப் பெற்றுக்கொள்ள மேடைக்கு முன்வரவில்லை.

இதனையடுத்து, இந்திய அணி கிண்ணத்தைப் பெறாமல் பரிசளிப்பு நிகழ்விலிருந்து விலகியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த இலங்கை மகளிர் அணி பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு, இரண்டாம் இடத்துக்கான காசோலையை பெற்றுக்கொண்டது.

இந்த சம்பவம் கடந்த 2025ஆம் ஆண்டு ஆடவர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியை நினைவுபடுத்தியுள்ளது. அப்போதும் சம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆடவர் அணி, மொஹ்சின் நக்வியிடமிருந்து கிண்ணத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை.

மொஹ்சின் நக்வி ஒரே நேரத்தில் ஆசிய கிரிக்கெட் பேரவைத் தலைவர், பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் மற்றும் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஆகிய பதவிகளை வகித்து வருகிறார்.

இந்தியா–பாகிஸ்தான் இடையிலான தொடர்ச்சியான அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சராகவும் பதவி வகிக்கும் நக்வியிடமிருந்து கிண்ணத்தைப் பெற இந்திய அணி விரும்பாததே இந்த முடிவுக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்திய மகளிர் அணியின் இந்த நடவடிக்கை, கிரிக்கெட் உலகில் மீண்டும் இந்தியா–பாகிஸ்தான் அரசியல் பதற்றம் தொடர்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore