சவுதி அரேபியாவின் முக்கிய கிழக்கு–மேற்கு எண்ணெய் குழாய் பாதை மீண்டும் இயங்கத் தவறினால், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 4% வரை குறைவு ஏற்படக்கூடும் என எண்ணெய் கொள்வனவாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் எச்சரித்துள்ளனர்.
ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் குறித்த முக்கிய எண்ணெய் குழாய் மூடப்பட்டுள்ள நிலையில், அதன் சேதத்தின் முழுமையான விபரங்களையோ அல்லது எப்போது மீண்டும் இயங்கும் என்பதையோ சவுதி அரேபியா இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
குறித்த குழாய் பாதை மூலம் சவுதி அரேபியா தினமும் சுமார் 40 இலட்சம் பீப்பாய்கள் எண்ணெயை செங்கடலில் உள்ள யன்பு துறைமுகத்திற்கு மாற்றி வந்துள்ளது. இது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 4% ஆகும்.
குழாய் பாதை தொடர்ந்து செயலிழந்தால், யன்பு துறைமுகத்தில் உள்ள எண்ணெய் கையிருப்பு 5 முதல் 7 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், குழாயை முழுமையாகச் சீரமைக்க 5 முதல் 6 வாரங்கள் வரை ஆகலாம் என ஒரு தரப்பு தெரிவித்துள்ள நிலையில், மற்றொரு தரப்பு அதைவிட விரைவாக சீரமைப்புப் பணிகளை முடித்து, பகுதியளவில் எண்ணெய் விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்க முடியும் எனக் கூறியுள்ளது.
இதனிடையே, ஏற்கனவே உலக சந்தையில் எரிபொருள் விலைகள் சாதனை அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், சவுதி எண்ணெய் விநியோகத்தில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டால் உலகளாவிய எண்ணெய் பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் மேலும் தீவிரமடையக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) தகவலின்படி, ஹோர்முஸ் நீரிணை மற்றும் செங்கடல் வழியான விநியோக பாதிப்புகளால் சவுதி அரேபியாவின் எண்ணெய் விநியோகம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான குறைந்த மட்டத்தை பதிவு செய்துள்ளது.
மேலும், போருக்கு முன்னர் மத்திய கிழக்கிலிருந்து தினசரி சுமார் 2.2 கோடி பீப்பாய்கள் எண்ணெய் விநியோகிக்கப்பட்ட நிலையில், தற்போது ஹோர்முஸ் நீரிணை வழியான எண்ணெய் போக்குவரத்து 60 இலட்சம் முதல் 90 இலட்சம் பீப்பாய்கள் வரை குறைந்துள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சவுதி அரேபியா OPEC-க்கு வழங்கிய தகவலின்படி, அந்நாட்டின் எண்ணெய் உற்பத்தி பெப்ரவரி மாதத்தில் தினசரி 10.9 மில்லியன் பீப்பாய்களாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 6.2 மில்லியன் பீப்பாய்களாக குறைந்துள்ளது.
இந்த நிலையில், எண்ணெய் குழாய் பாதை விரைவாக மீளச் செயற்படாவிட்டால், உலகளாவிய எரிபொருள் சந்தையில் மேலும் கடுமையான தாக்கம் ஏற்படக்கூடும் என எண்ணெய் சந்தை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.





