இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை 7 ஆகக் குறைப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி சீர்திருத்தங்களுக்கான உபகுழு தெரிவித்துள்ளது.
இதன்படி, புதிய பாடத்திட்டத்தில் வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளிட்ட 7 பாடங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் நடைபெற்ற கல்வி சீர்திருத்தங்களுக்கான உபகுழுக் கூட்டத்தில் இது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், தரம் 12 மற்றும் 13 மாணவர்களுக்காக சமூக ஒருங்கிணைவு, சட்டம் மற்றும் ஒழுக்கவியல் ஆகிய புதிய பாடத் தொகுதிகளை அறிமுகப்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள பொதுக் கல்வி மற்றும் முன்பள்ளிக் கல்வி சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
சீர்திருத்தங்களின் ஆரம்ப கட்டமாக, தரம் 2 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கான செயற்பாட்டு நூல்கள், ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் பாடத் தொகுதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆசிரியர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் எதிர்வரும் காலங்களில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்வியை முறைப்படுத்துவதற்காக தேசிய முன்பள்ளிக் கல்விக் கொள்கை ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் முன்பள்ளிகளைப் பதிவு செய்தல், பாடத்திட்டம் தயாரித்தல், ஆசிரியர் வழிகாட்டிகளை உருவாக்குதல் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





