ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களுக்கு மத்தியிலும், உக்ரைனின் அரச தபால் சேவையான Ukrposhta, முன்களப் பகுதிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.
தபால் சேவை மட்டுமன்றி, ஓய்வூதியத்தை பணமாக வழங்குதல், மின்சாரம் உள்ளிட்ட பயன்பாட்டு கட்டணங்களை வசூலித்தல், உணவு மற்றும் மருந்துகளை விநியோகித்தல் போன்ற முக்கிய பணிகளையும் Ukrposhta முன்னெடுத்து வருகிறது.
குறிப்பாக, ரஷ்யத் தாக்குதல்களால் நகரங்களுக்கு செல்வது ஆபத்தானதாக மாறியுள்ள தொலைதூர கிராமங்களில் வசிக்கும் முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இந்த சேவை முக்கியமான உயிர்நாடியாக விளங்குகிறது.
எனினும், முன்களப் பகுதிகளுக்கு செல்லும் தபால் வாகனங்கள் ரஷ்ய ட்ரோன் தாக்குதல்களுக்கு இலக்காகும் அபாயம் தொடர்ந்து காணப்படுகிறது. 2022ஆம் ஆண்டு முதல் நூற்றுக்கணக்கான Ukrposhta கிளைகள் மற்றும் வாகனங்கள் தாக்குதல்களால் சேதமடைந்துள்ளதுடன், 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக Ukrposhta தெரிவித்துள்ளது.
ரஷ்ய தாக்குதலால் தபால் அலுவலகம் அழிக்கப்பட்ட நிலையிலும், மக்களுக்கு சேவை செய்வதைத் தொடரும் தபால் ஊழியர்களின் பணியானது, போரின் மத்தியில் உக்ரைனின் அன்றாட வாழ்க்கையைத் தாங்கி நிற்கும் முக்கியமான முயற்சிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.





