மதுபோதையிலும் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையிலும் வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்டறிவதற்கான சோதனைகளை நாடளாவிய ரீதியில் தீவிரப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
போதைப்பொருள் பயன்பாடு, மதுபோதையில் வாகனம் செலுத்துதல், ஆபத்தான மற்றும் கவனயீனமான வாகனம் செலுத்துதல், அத்துடன் அதிகப்படியான சோர்வு ஆகியவை வீதி விபத்துகளுக்கான முக்கிய காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறிப்பாக டிப்பர் வாகனங்கள், லொறிகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பயணிகள் பேருந்துகளின் சாரதிகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தி சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்தியதாக அடையாளம் காணப்பட்ட பல பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், சில சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அதிக வேகத்தில் அல்லது ஆபத்தான முறையில், போட்டியிடும் வகையில் அல்லது போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் பேருந்துகளை செலுத்தும் சாரதிகள் தொடர்பான காணொளி ஆதாரங்களை, வாகன இலக்கம் தெளிவாகத் தெரியும் வகையில் 070 475 5600 என்ற WhatsApp இலக்கத்திற்கு அனுப்புமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில், குறித்த நபர்களுக்கு எதிராக தராதரம் பாராது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





