பங்களாதேஷின் அதிகரித்து வரும் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இந்தியா சுமார் 47 லட்சம் லிட்டர் டீசலை அந்நாட்டுக்கு அனுப்பியுள்ளது.
இந்திய–பங்களாதேஷ் நட்புறவு எண்ணெய் குழாய் (India-Bangladesh Friendship Pipeline) ஊடாக சுமார் 4,000 மெட்ரிக் தொன் டீசல், தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பர்பதிபூர் முனையத்தை சென்றடைந்துள்ளது.
இந்த விநியோகம் குறித்த குழாயின் 72ஆவது சரக்குத் தொகுதியாகும். கடந்த செப்டம்பர் 13ஆம் திகதி காலை ஆரம்பிக்கப்பட்ட டீசல் பரிமாற்றம், செப்டம்பர் 15ஆம் திகதி நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், 15 ஆண்டுகளில் சுமார் 20 இலட்சம் மெட்ரிக் தொன் டீசலை பங்களாதேஷ் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணெய் குழாய் செயல்பாட்டுக்கு வந்ததிலிருந்து, இதுவரை 330,087 மெட்ரிக் தொன் டீசல் இந்தியாவிலிருந்து பங்களாதேஷுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த குழாய் ஆண்டுக்கு 10 இலட்சம் மெட்ரிக் தொன் அதிவேக டீசலை (HSD) கொண்டு செல்லும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பில் இந்த திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் அழுத்தம் ஏற்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதம் 17,000 மெட்ரிக் தொன் டீசல் உள்ளிட்ட பல்வேறு கட்டங்களாக இந்தியாவிலிருந்து பங்களாதேஷ் எரிபொருளை பெற்றிருந்தது.
மேலும், கூடுதல் பெட்ரோலியப் பொருட்களை வழங்குமாறு பங்களாதேஷ் ஆகஸ்ட் மாதம் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது இந்த புதிய டீசல் தொகுதி அனுப்பப்பட்டுள்ளது.





