அமெரிக்க அதிகாரிகள், FIFA உலகக் கிண்ணப் போட்டிகளை சட்டவிரோதமாக நேரடியாக ஒளிபரப்பிய சுமார் 400 இணையதளங்களை முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அமெரிக்க நீதித்துறை (DOJ) வெளியிட்ட தகவலின்படி, FIFA, NBCUniversal மற்றும் Warner Bros. Discovery ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த இணையதளங்கள் அடையாளம் காணப்பட்டன. இவை பதிப்புரிமை அனுமதியின்றி உலகக் கிண்ணப் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது பெரு மற்றும் பல்கேரியாவில் உள்ள சேவையகங்கள் மற்றும் இணைய முகவரிகள் குறிவைக்கப்பட்டதுடன், குரோஷியா, ருமேனியா, போலந்து மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளிலும் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றான FIFA உலகக் கிண்ணப் போட்டிகளின் பதிப்புரிமை மீறல் ஒளிபரப்புகள் மூலம் இலாபம் ஈட்டிய சர்வதேச வலையமைப்புகளை இந்த நடவடிக்கை சீர்குலைத்துள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
மேலும், சட்டவிரோத ஒளிபரப்பு இணையதளங்களை பயன்படுத்துவது பதிப்புரிமைச் சட்டங்களை மீறுவதோடு, பயனர்களின் தனிப்பட்ட மற்றும் நிதி தகவல்களை ஆபத்துக்குள்ளாக்கும் மால்வேர் தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பற்ற இணைய இணைப்புகளுக்கும் வழிவகுக்கக்கூடும் என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு விசாரணைப் பிரிவு எச்சரித்துள்ளது.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ இணைந்து நடத்தும் FIFA உலகக் கிண்ணம் கடந்த ஜூன் 11 அன்று தொடங்கி, ஜூலை 19 அன்று நிறைவடையவுள்ளது.





