முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத பண்டார, சீன பிரஜை ஒருவருக்குச் சொந்தமான ரூ. 20 மில்லியன் (2 கோடி ரூபா) கொள்ளைச் சம்பவம் தொடர்பில் எதிர்வரும் ஜூலை 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) சந்தேகநபரை 24 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்த பின்னர், இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டது.
இதன்போது, கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், சந்தேகநபரின் தொலைபேசி பதிவுகள், வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் கிரிப்டோகரன்சி தொடர்பான பரிவர்த்தனைகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
மேலும், இன்று நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் சாட்சியாளர் ஒருவர் முதலாவது சந்தேகநபரை அடையாளம் காட்டியுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட உள்ளதாகவும், மோசடிக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வாகனம் கைப்பற்றப்பட உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் நான்கு சந்தேகநபர்களும் ஜூலை 27 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், வழக்கு அன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.





