அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் செனட் வேட்பாளர் தெரிவுப் போட்டியில், பொதுச் சுகாதார நிபுணரும் முற்போக்குக் கொள்கைகளை முன்னிறுத்தும் அரசியல்வாதியுமான அப்துல் எல்-சயீத் வெற்றி பெற்றுள்ளார்.
அவரது போட்டியாளரான காங்கிரஸ் உறுப்பினர் ஹேலி ஸ்டீவன்ஸை மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து, நவம்பரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் உத்தியோகபூர்வ வேட்பாளராகத் தெரிவாகியுள்ளார்.
இந்தத் தேர்தல் பிரசாரத்தில் 60 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டதாகவும், அதில் AIPAC தலைமையிலான இஸ்ரேல் ஆதரவு அமைப்புகள் 30 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை ஹேலி ஸ்டீவன்ஸுக்கு ஆதரவாக செலவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எகிப்திய வம்சாவளியைச் சேர்ந்த அப்துல் எல்-சயீத், காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையை “இனப்படுகொலை” எனக் குறிப்பிட்டதுடன், வெளிநாட்டு மோதல்களுக்கு செலவிடப்படும் அமெரிக்க வளங்களை சுகாதாரம், வீடமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக பயன்படுத்த வேண்டும் என தனது தேர்தல் பிரசாரத்தில் வலியுறுத்தியிருந்தார்.
அவர் நவம்பரில் நடைபெறும் பொதுத் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக் ரோஜர்ஸை எதிர்கொள்ளவுள்ளார். இந்தத் தேர்தல், அமெரிக்க செனட்டின் கட்டுப்பாட்டை தீர்மானிக்கும் முக்கிய தேர்தல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
அப்துல் எல்-சயீத் வெற்றி பெற்றால், அமெரிக்க செனட்டில் பதவியேற்கும் முதல் முஸ்லிம் உறுப்பினராக வரலாறு படைப்பார்.
இதனிடையே, தோல்வியை ஒப்புக்கொண்ட ஹேலி ஸ்டீவன்ஸ், அப்துல் எல்-சயீத்துக்கு தனது ஆதரவை அறிவித்துள்ளார். மிச்சிகன் ஆளுநர் கிரெட்சன் விட்மர் மற்றும் செனட்டர் கேரி பீட்டர்ஸும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்த முடிவு குடியரசுக் கட்சிக்கு சாதகமானது என சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டுள்ளார்.





