சர்வதேச ஊடகங்களுக்கு பாகிஸ்தான் புதிய கட்டுப்பாடுகள் – பத்திரிகையாளர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு

பாகிஸ்தானில் செயல்படும் சர்வதேச ஊடகங்களுக்கான செய்திச் சேகரிப்பு மற்றும் செய்தி வெளியீட்டில் கடுமையான புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு அமுல்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் மற்றும் ஊடக சுதந்திர ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புதிய வழிகாட்டல்களின்படி, இஸ்லாமாபாத், கராச்சி மற்றும் லாகூர் ஆகிய மூன்று நகரங்களைத் தவிர, பாகிஸ்தானின் ஏனைய எந்தப் பகுதிகளிலும் செய்தி சேகரிக்க அல்லது செய்தி வெளியிட விரும்பும் சர்வதேச ஊடகவியலாளர்கள் மட்டுமன்றி, பாகிஸ்தான் பிரஜைகளும் முன்கூட்டியே அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தானில் பணியாற்றும் அனைத்து சர்வதேச ஊடக நிறுவனங்களும், ஊடகவியலாளர்களும் கட்டாயமாக பதிவு செய்து அங்கீகாரம் பெற வேண்டும் என்றும், “பாகிஸ்தானின் கொள்கை, இறையாண்மை, பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்குக்கு எதிரான செயற்பாடுகளில்” ஈடுபட்டதாக கருதப்பட்டால் அவர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படலாம் என்றும் புதிய விதிமுறைகள் குறிப்பிடுகின்றன.

இந்த நடவடிக்கை, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் அதில் பலர் உயிரிழந்த சம்பவங்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டதைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, அல் ஜசீரா மற்றும் BBC உள்ளிட்ட ஊடகங்கள் அந்தச் சம்பவங்களை செய்தியாக வெளியிட்டதைத் தொடர்ந்து, அல் ஜசீரா இணையதளத்திற்கான அணுகல் பாகிஸ்தானில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், BBC செய்தியாளர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நடவடிக்கையை விமர்சித்த பாகிஸ்தான் கூட்டாட்சி பத்திரிகையாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் நசீர் சைதி, இராணுவ ஆட்சி காலங்களிலும் கூட சர்வதேச ஊடகங்களுக்கு இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என்றும், “இது இராணுவச் சட்டத்தைவிட மோசமான நிலை” என்றும் தெரிவித்துள்ளார்.

எனினும், புதிய விதிமுறைகள் ஊடகச் சுதந்திரத்தை ஒடுக்கும் நோக்கமுடையவை அல்ல என்றும், அவை தேசிய பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்தும் வகையிலான நடைமுறைகள் என்றும் பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore